Marudhanayagam

 மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன்:

இரண்டு முறை தூக்கிலிட்டும் உயிர்நீங்கா மாவீரன், இறுதியாக மூன்றாவது முறை மிகத் திடமான கயிற்றில் நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் அந்த மாவீரனின் உயிர் பிரிந்தது. ஒட்டுமொத்த நாடும் துயரில் மூழ்கியது. அதோடு நிற்கவில்லை. மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர். உடல் பாகங்களை தனித்தனியே வெற்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைத்து அடக்கம் செய்தனர். ஆம், உயிர்நீத்த பின்பும் எதிரிகள் கண்டு அஞ்சியது மருதநாயகத்தின் உடலைத் தான். யார் இந்த மருதநாயகம், தமிழகத்தில் இவரால் பயனடைந்த பகுதிகள் தான் என்ன ? என்ற ஒட்டுமொத்த தேடலின் ஓர் சிறிய பகுதிதான் இக்கட்டுரைத் தொகுப்பு.

இராமநாதபுரம் மாவட்டம், பனையூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் மருதநாயகம். இவரது முழுப் பெயர் கான்சாஹிப் மருதநாயகம். மதுரைக்கு உட்பட்ட பகுதிகளை இவர் ஆட்சி செய்ததால் இப்பெயர் ஏற்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் கூறப்படுகிறது. தனது இளமைக் காலத்தில் தஞ்சாவூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்ஹானின் படையில் சிறிது காலம் பணிபுரிந்தார். இதுதான், இவரது முதல் இராணுவ அனுபவம்.

பாண்டிச்சேரிப் பயணம்

தஞ்சையில் தனது போர்த் திறமையை மேம்படுத்திய மருதநாயகம் பின், பாண்டிச்சேரிக்குச் சென்று பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரராக இணைந்து கொண்டார். தொடர்ந்து, போரின் போதும், விவாதத்தின் போதும் இவர் ஆற்றிய தலைமைப் பண்பு, நுட்பம், திறமை உள்ளிட்டவற்றால் வியந்த பிரெஞ்சு தளபதிகள் சில காலத்திலேயே முக்கியப் பதவிகளை கான்சாஹிப் மருதநாயகத்திடம் ஒப்படைத்தனர்.

ஆங்கிலேயர் படையில் மாவீரர்

ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் சரியத் துவங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்தனர். இதனிடையே பிரெஞ்சு படைத் தளபதிகளுக்கும், மருதநாயகத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆங்கிலேயரின் படையில் இணைந்தார் மருதநாயகம்.

கிருஷ்ணகிரிப் போர்

தற்போது கிருஷ்ணகிரி என அழைக்கப்படும் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையினரை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரை வியப்பில் ஆழ்த்தியது. ஒருமுறை மருதநாயகம் தனது படைவீரர்கள் சிலருடன் மட்டும் இருக்கையில் பல நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை சூழ்ந்து போரிட்டனர். அப்போது அவராற்றிய செயல், எதிரிகளை வீழ்த்துவதில் காட்டியை வேகம் ஆங்கிலேயர்களார் ஆளுநர் பொறுப்பை பெற்றுத் தந்தது.

ஆளுநரான மருதநாயகம்

தொடர்ந்து நடைபெற்ற போர்கள், அனைத்திலும் வெற்றிகண்ட மாவீரர் மருதநாயகம். தெற்குச் சீமைகளாக இருந்த மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகளைக் குவித்து தெற்குச் சீமையின் ஆளுநராக பொறுப்பேற்றார் அவர்.

விழித்தெழுந்த மருதநாயகம்

ஆற்றல் மிகுந்த தளபதியாய், பல்வேறு நிலப்பரப்புகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மருதநாயகத்திற்கு சற்று தாமதமாகத்தான் புரிந்தது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சித் திட்டம். நம் நாட்டை நாமே ஆள வேண்டும் என விழித்தெழுந்த அவர் தேசப் பற்றும், விடுதலை உணர்வும் பெற்று ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துவங்கினார்.

தஞ்சை காத்த வீரன்

ஒருமுறை பிரெஞ்சு அரசுக்கு எதிரான போரின் போது போரின் ஒரு திட்டமாக காவிரியாற்றின் கால்வாய்களையும், தடுப்பணைகளையும் உடைக்கும் பணியை பிரெஞ்சுப் படை செய்ய திட்டம் தீட்டியது. இதனை அறிந்த மருதநாயகம், பிரெஞ்சுப் படையின் திட்டத்தை முறையடித்து தஞ்சை மண்டலத்தில் விவசாயத்தையும், தன் மக்களையும் காப்பாற்றினார்.

தமிழகத்திற்குத்தான் முல்லைப் பெரியாறு

இன்றும் கூட பல சர்ச்சைகளை சந்தித்து வரும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசன நீரை மதுரைக்கு கொண்டு வர அன்றைய காலகட்டத்திலேயே திட்டமிட்டவர் மருதநாயகம். தமிழக மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, தமிழகத்திற்கு உட்பட்ட பாசனப் பகுதிகளை செழிக்க வைக்கும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் அணையைக் கட்டியவரும் இவர்தான். திருநெல்வேலியில் உள்ள மேட்டுக் கால்வாய் திட்டத்தை வடிவமைத்து செயலாற்றியவரும் இந்த மாவீரனே.

இந்த உண்மை தெரியுமா ?

நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதே அந்நாட்டிற்கான வணிகத்தையும், விவசாயத்தையும் மேம்படுத்துவதுதான் என உணர்ந்த மருதநாயகம் வணிகத்துக்கு துறை முகங்களும், நல்ல சாலைகளும் முக்கியம் என்பதை அறிந்து தரமான சாலைகளை அமைத்தார். இதற்கு எடுத்துக்காட்டு இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்ததும், பிரசித்தம் பெற்ற சுற்றுலாத் தலமாகவும் உள்ள கொடைக்கானலுக்கு முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயகத்தின் உத்தரவின் பேரில் தான்.

மதுரை காத்த மாவீரன்

பிறப்பால் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் தன் நாட்டு மக்களின் ஒற்றுமை காப்பதில் சிறந்து விளங்கினார் கான்சாஹிப். ஆங்கிலேயர் மற்றும் ஆற்காட்டு நவாப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மதுரை கள்ளழகர் கோவிலின் நிலங்களை மீட்டு, கோவிலுடன் இணைத்தார். தொடர்ந்து, போரின் போது சிதிலமடைந்திருந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலையும் சீர் செய்து மக்களின் மனதை வென்றார். இன்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள செப்பேடுகளின் வாயிலாக இதை அறியமுடியும்.

மதுரையால் விளைந்த போர்

மதுரையில் கொடிகட்டிப் பறந்த மருதநாயகத்தை வீழ்த்த எண்ணிய நவாப் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு ஆங்கிலேயர்கள் மூலம் அவரை வீழ்த்த முடிவு செய்தார். அதன் விளைவு கப்பம் வசூலிப்பதன் மூலம் போராக மூண்டது. இடையில் சிவகங்கையில் சமஸ்தானம் பிரிப்பதிலும் ஆங்கிலேயர்களின் கட்டளைப்படி சிற்றரசர்கள் மருதநாயகத்தை எதிர்க்கத் துவங்கினர்.

போர் முழக்கம்

மதுரை போர் உக்கிரமடையத் துவங்கியது. மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது. ஆயிரக் கணக்கான வீரர்கள், ஆங்கிலேயர்களின் அதிரடிப்படை என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினரோ பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர் படையில் இருந்த இந்திய வீரர்களை மனதில் கொண்டு போரை தற்காலிகமாக நிறுத்தினார் மருதநாயகம்.

நயவஞ்சகத்தால் வீழ்ந்த நாயகன்

போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர். மருதநாயகத்தின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை பொன்னுக்கும், பொருளுக்கும் விலைக்கு வாங்கினர். எளிதில் நெருங்க முடியாத மருதநாயகத்தை ரமலான் மாதத்தில் தொழுகையின் போது மருதநாயகத்தை சூழ்ந்து சிறைபிடித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களின் பாதுகாப்புடன் ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார் அந்த நாயகன்.

பயமறியா முகம்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் கருப்பு நாள் அது. ஆம், 1764, அக்டோபர் 10 மதுரைக்கு அருகே உள்ள சம்மட்டிபுரத்தில் அவரை தூக்கிலிட முடிவு செய்யப்பட்டு மருதநாயகம் கொண்டு வரப்பட்டார். அந்த மாவீரனின் முகத்தில் துளியும் பயம் இல்லை. அதுமட்டுமா, முதல் முறை தூக்கிலிடப்பட்டும் அவர் உயிர் நீங்கவில்லை. மாறாக கயிறே அறுந்து விழுந்தது. புதிய கயிற்றில் மீண்டும் தூக்கிலிடப்பட்டார். அத்தியாகியின் உயிர் அவரை தியாகம் செய்ய விடவில்லை. இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகு மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடும் இருளில் மூழ்கியது.

தொடைநடுங்கிய ஆங்கிலேயர்கள்

மருதநாயகத்தை தூக்கிலிட்டும் அவர், மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என்று பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர். தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பி அடக்கம் செய்தனர்.

மருதநாயகம் நினைவிடம்

அவரது உடலின் ஒரு பாகம் மதுரை சம்மட்டிபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவருக்கு நினைவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், மற்றொன்று பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும், பூதஉடல் மதுரையிலும் அடக்கம் செய்யப்பட்டதாக பல வரலாற்று ஆய்வுகளிலும், குறிப்புகளிலும் கூறப்படுகிறது.






Comments

Popular Posts