விக்கிரமாதித்தன் கதைகள்

 


விக்கிரமாதித்தன் கதைகள்

பேசா மடந்தை பேசினாள்.

உச்ஜயினி மாகாளிப் பட்டணத்தைச் சீரும் சிறப்புமாக விக்கிரமாதித்த மன்னன் ஆண்டு வந்த காலத்தில். பாடலிபுத்திர நகரில் பேரழகு வாய்ந்த இளவரசி ஒருத்தி  இருந்தாள். தன் அரண்மனைக்குள் புகுந்து, யார் தன்னை மூன்று வார்த்தைகள் பேச வைக்கிறாரோ, அவரையே தான் திருமணம் செய்துகொள்வதாக அந்த அரசகுமாரி அறிவித்திருந்தாள். அதனால் அவள் பெயர் ‘போசா மடந்தை’ என்று வழங்கி வரலாயிற்று.

பேசா மடந்தையை எப்படியாவது பேச வைத்து, அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் விக்கிரமாதித்தன் பாடலிபுத்திரம் செல்லப் புறப்பட்டான். மந்திரி பட்டியும் வேதாளமும் அவனுடன் சென்றனர்.


பேசா மடந்தையின் அரண்மனைக்குள் நுழைந்ததும் வாயிலிலிருந்த ஆராய்ச்சி மணியை அடித்தான் விக்கிரமாதித்தன். உடனே அங்கிருந்த அதிகாரிகள் வந்து வரவேற்று, விக்கிரமாதித்தனிடம் ஆயிரம் பொன் வாங்கிக்கொண்டு அவனுக்கு விருந்து வைத்தார்கள்.

விருந்தில் பரிமாறப்பட்ட வெந்த சோறு, உரித்த பழம், கரும்பு ஆகியவற்றை விக்கிரமாதித்தன் உண்டான். வேகாத சோறு, உரியாத பழம் முதலானவற்றைப் பட்டியிடம் கொடுத்தான். பட்டி அவற்றைப் பத்திரப்படுத்திக் கொண்டான். விருந்து முடிந்த பின் அங்கிருந்த அதிகாரிகளுள் ஒருவனுடன் பேசிக்கொண்டு விக்கிரமாதித்தனும் பட்டியும் இரண்டாம் வாசலுக்கு அருகில் வந்தார்கள்.

“நாங்கள் வருகின்றபொழுது ஒதுங்காமல் ஏன் வழியில் நிற்கிறாய்?” என்று வாசல் காப்போனைக் கடிந்துகொண்டே, அவனை இரண்டாம் கட்டிற்குள் தள்ளினான் பட்டி. உள்ளே மூன்று பதுமைகள் இருந்தன. ஒரு பதுமை அங்கு ஒரு முக்காலி போட்டது. மற்றொரு பதுமை காவலாளியை அதில் உட்கார வைத்தது. இன்னொரு பதுமை அவனுடைய தலையை மொட்டையடிக்கத் தொடங்கியது.

பட்டியும் விக்கிரமாதித்தனும் அதிகாரியோடு பேசிக்கொண்டே இரண்டாம் கட்டைக் கடந்து மூன்றாம் வாசலுக்கு சென்றார்கள். சண்டை போடுவதற்குத் தயாராக இரு வீரர்கள் அங்கு நின்று கொண்டிருந்தார்கள். விக்கிரமாதித்தனும் பட்டியும் அதிகாரியை அந்த வீரர்களிடத்தில் தள்ளி விட்டார்கள். இரண்டு வீரர்களும் அதிகாரியுடன் சண்டையிடத் தொடங்கினார்கள்.

அந்தச் சமயத்தில் விக்கிரமாதித்தனும் பட்டியும் மூன்றாம் கட்டைக் கடந்து நான்காம் வாசலுக்குச் சென்றார்கள். வேதாளமும் அவர்களுடன் சென்றது. அங்கு ஒரு கருங்குரங்கு இருந்தது. பட்டி பத்திரப்படுத்தி வைத்திருந்த வேகாத சோற்றைக் கருங்குரங்கிற்கு முன் வைத்தான். அந்தச் சோற்றை அது உண்ணவில்லை. அது உண்மையான குரங்கு அல்ல என்பதையும் வெறும் பொம்மை என்பதையும் அறிந்து, வேதாளத்தைக் கொண்டு அதை அடித்து நொறுக்கினார்கள்.

இவ்விதமாக ஐந்தாம் வாசலில் இருந்த பொம்மைப் புலியையும், ஆறாம் வாசலில் இருந்த பொம்மை யானையையும் அடித்து நொறுக்கினார்கள். ஏழாம் வாசலில் ஒரு கிணறு இருந்தது. கிணற்றிலிருந்த விசையில் ஒரு கல்லை எடுத்து போட, கிணறு மூடிக் கொண்டது. கிணற்றைக் கடந்து, எட்டாம் வாசலுக்குப் போனார்கள். அங்கே சேறும் சகதியுமாக இருந்தது. விக்கிரமாதித்தன் மட்டும் அதில் நடந்து சென்றான். பிறகு பட்டியைத் தனது தோளில் ஏற்றிக்கொண்டு சேற்றை ஒரே தாண்டாகத் தாண்டிவிட்டது வேதாளம். விக்கிரமாதித்தனின் கால்களில் பதிந்திருந்த சேற்றை அங்கு இருந்த ஓர் ஓலைச் சுருளால் பட்டி வழித்தான். பிறகு, நத்தைக் கூட்டில் வைக்க்ப்பட்டிருந்த தண்ணீரில் பாதியைச் செலவழித்துத் தனது கால்களை விக்கிரமாதித்தன் சுத்தப்படுத்திக் கொண்டான்.

ஒன்பதாம் வாசலுக்குச் சென்றார்கள். அங்கு ஒரு பளிங்கு மண்டபம் இருந்தது. அதில் சாதாரணமாக நடந்து செல்பவர்கள் வழுக்கி விழுந்து மண்டையை உடைத்துக்கொள்வார்கள். ஆகவே, மெழுகைக் காய்ச்சித் தனது பாதங்களில் தடவிக்கொண்டு, விக்கிரமாதித்தன் அந்த மண்டபத்தைக் கடந்தான், பட்டியை வேதாளம் தூக்கிச் சென்றது.

பத்தாம் வாசலுக்குச் சென்றார்கள். அங்கே ஆயிரங்கால் மண்டபம் இருந்தது. உள்ளே ஒரே இருட்டு. மண்டபத்தினுள் செல்பவர்கள் அங்குள்ள தூண்களில் மோதி மண்டையை உடைத்துக் கொள்வார்கள். ஆகவே, பட்டி ஒரு வண்டு உருவம் எடுத்து, வேதாளத்தின்மேல் உட்கார்ந்து கொண்டான். தூண்களில் மோதிக்கொள்ளாமல் வேதாளம் மண்டபத்தைக் கடந்தது. வண்டாக மாறிய பட்டி, ரீங்காரமிட்டுக் கொண்டே சென்றதால் அந்த ஒலியைப் பின்பற்றி விக்கிரமாதித்தனும் மண்டபத்தைக் கடந்தான்.

பிறகு, ஒரு வாசலில் அவர்கள் நுழைந்தார்கள். அங்கு ஓர் அழகான கட்டில் இருந்தது. அதன் அருகில் பெண்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டிலின் தலைப் பக்கம் எது, கால் பக்கம் எது என்பதை அறிந்து. அதில் சரியாக உட்கார்ந்தால் அந்தப் பெண்கள் பணிவிடை செய்வார்கள். இல்லாவிட்டால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமானப்படுத்துவார்கள். ஆகவே கட்டிலின் மையத்தில் எலுமிச்சம் பழம் ஒன்றை விக்கிரமாதித்தன் வைத்தான். கொஞ்சம் சிரிவாக இருந்த பக்கத்தில் அதி உருண்டு ஒடியது. சரிவான பக்கம்தான் கால்பக்கம் என்பதறிந்து, தலைமாட்டில் சரியாக உட்கார்ந்தான் விக்கிரமாதித்தன்.

தூங்கிக் கொண்டிருந்த பெண்களின் கூந்தலை ஒன்று சேர்த்து முடிந்துவிட்டு அவர்களுள் ஒரு பெண்ணைப் பலமாகக் கிள்ளினான் பட்டி. அலறிக்கொண்டு எழந்த பெண்கள், சரியான பக்கத்தில் விக்கிரமாதித்தன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சிரியப்பட்டார்கள். அவர்களது கூந்தல் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தால் ஓவென்று கத்திக்கொண்டு ஓடிப் பேசா மடந்தையிடம் சென்று விஷயத்தைக் கூறினார்கள்.

விளக்கு ஏற்றுகிற பெண்னை இளவரசிபோல் அலங்கரித்து, விக்கிரமாதித்தனை அழைத்து வர அனுப்பினாள் பேசா மடந்தை. தோழிகள் புடைசூழ அவள் வருகிற கோலத்தைக் கண்டு,  அவள்தான் பேசா மடந்தையோ என விக்கிரமாதித்தனுக்கு ஐயம் ஏற்பட்டது. வேதாளத்திடம் கேட்டான்.

உடனே வேதாளம், அந்தப் பெண் ஏந்தி வந்த விளக்கின் திரியை உள்ளே இழுத்தது. உடனே அவள் விளக்கின் திரியைத் தூண்டிவிட்டுவிட்டு, விரலில் படிந்த எண்ணெயைத் தலையில் துடைத்தாள். அதைக் கண்டதும் ‘உண்மையிலேயே இவள் இளவரசி என்றால் தனித் துணியில் அல்லவோ எண்ணெயைத் துடைத்திருப்பாள்! தலையில் துடைத்திருக்க மாட்டாளே’ என்று யூகித்து, ‘இந்தப் பெண் பேசா மடந்தை அல்லள்’ என்பதை அறிந்துகொண்டான் விக்கிரமாதித்தன்.

“விளக்கு நாச்சியாரே, என்னை வரவேற்க உன் இளவரசி வரக்கூடாதா?” என்று கேட்டான் விக்கிரமாதித்தன். இதனால் வெட்கமுற்ற அந்தப் பெண் திரும்பிப் பாராமல் ஓடிவிட்டாள்.

அதன்பின்னர், சமையற்காரியை இளவரிசிபோல் அலங்கரித்து அனுப்பினாள் பேசா மடந்தை. அவளும் அவளுடன் வந்த பெண்களும் விக்கிரமாதித்தனுக்கு உணவு பரிமாறினார்கள். அப்பொழுது நெய்க் கிண்ணத்தை வேதாளம் தட்டிவிட்டது. கிழே விழுந்த நெய்யை எடுத்து மீண்டும் கிண்ணத்தில் இட்டாள் அந்தப் பெண். இச்செய்கையால் ‘இவள் சமையற்காரி’ என்பதை விக்கிரமாதித்தன் யூகித்து அறிந்து கொண்டான்.

அதன்பின் உண்மையான இளவரசி பேசா மடந்தையிடம் விக்கிரமாதித்தனை அழைத்துச் சென்றார்கள். அவனை ஒரு கட்டிலில் இருக்கச் சொல்லிவிட்டு, எதிரே மற்றொரு கட்டிலில் பேசா மடந்தை உட்கார்ந்தாள். இருவருக்கும் இடையில்  ஒரு திரை தொங்கவிடப்பட்டிருந்தது.

இளவரசி பேசா மடந்தை மௌனமாக உட்கார்ந்திருந்தாள். பொழுது விடிவதற்குள் அவளை மூன்று வார்த்தைகள் பேசும்படி செய்ய வேண்டும். இல்லாவிடில் விக்கிரமாதித்தன் தலை சிதறி இறந்துவிடுவான்.

எனவே, கட்டில்களுக்கு இடையில் தொங்கவிடப்பட்டிருந்த திரைச்சீலைக்குள் புகும்படி வேதாளத்திற்கு விக்கிரமாதித்தன் கட்டளையிட்டான். பின்னர், ‘இளவரசிதான் பேசமாட்டேன் என்கிறார். நீயாவது ஒரு கதை சொல்” என்று திரைச்சீலையிடம் கேட்டான். திரைச்சீலை பேசத் தொடங்கியதும், ஆத்திரமுற்று அதை அவிழ்த்து எறிந்துவிட்டாள் இளவரசி பேசாமடந்தை. திரைச்சீலை கூறிய விடுகதை ஒன்றுக்கு வேண்டுமென்றே தவறான பதிலைக் கூறினான் விக்கிரமாதித்தன். அதைப் பொறுக்காத இளவரசி பேசா மடந்தை ஆத்திரத்துடன் சரியான விடையைக் கூறினாள்.

இப்படியே இளவரசி பேசா மடந்தை தொடர்பான வேறு இரண்டு விடுகதைகளுக்கும் தவறான விடைகளைக் கூறினான் விக்கிரமாதித்தன். அப்பொழுது ஆத்திரத்துடன் சரியான விடைகளைக் கூறினாள் இளவரசி பேசா மடந்தை. இவ்விதமாக அவள் மூன்று முறை பேசிவிட்டாள்.

இளவரசி பேசா மடந்தையைப் பேசவைத்த விக்கிரமாதித்தன், அவளையே திருமணம் செய்து கொண்டான். 

Comments

Popular Posts